ஷாரூக்கானின் திரைப்படத்தில் ‘ஏக் தா டைகர்’ கதாபாத்திரத்தில் தோன்றும் சல்மான்கான் | salman khan tiger to play cameo in sharukh pathan

328

நடிகர் ஷாரூக்கானின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சல்மான்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். குறிப்பாக ‘ஏக் தா டைகர்’ திரைப்படத்தில் தான் நடித்திருந்த டைகர் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் இருவர் சல்மான் மற்றும் ஷாரூக்கான். இருவருக்கும் ஒரு காலத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்தாலும் சமீப வருடங்களில் இருவரும் நட்பு பாராட்டியே இருந்து வருகின்றனர். மேலும், சல்மான்கானின் ‘ட்யூப் லைட்’ திரைப்படத்தில் ஷாரூக்கான் கவுரவத் தோற்றத்திலும், ஷாரூக்கானின் ‘ஜீரோ’ திரைப்படத்தில் சல்மான் கவுரவத் தோற்றத்திலும் தோன்றியது இருவரது நட்பின் ஆழத்தைக் காட்டியது.

இரண்டு வருடங்கள் கழித்து ஷாரூக்கான் ‘பதான்’ என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு இது அவருக்கு பாலிவுட்டில் மறுவாழ்வு தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தார்த் ஆனந்த் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இது அவர் ‘ஏக் தா டைகர்’ படத்தில் நடித்த டைகர் கதாபாத்திரமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘ஏக் தா டைகர்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்துக்கான படப்பிடிப்பை சல்மான்கான் ஆரம்பிக்கிறார். ‘டைகர் 3’, ‘பதான்’ என இரண்டு படங்களையுமே யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரம் இன்னொரு திரைப்படத்தில் தோன்றுவது பாலிவுட்டில் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. ரோஹித் ஷெட்டி தனது போலீஸ் திரை வரிசையில் ‘சிங்கம்’ படத்தின் நாயகன் அஜய் தேவ்கன், ‘சிம்பா’ படத்தின் ரன்வீர் சிங் இருவரையும் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தில் கவுரவத் தோற்றங்களில் நடிக்க வைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.thanks