விஜய் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு எதிரொலி; புதிய கட்சி தொடங்கும் பணியை நிறுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர் | SAC new party works halted

412

‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். கட்சி என்ற பெயரில் தனது பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை நவ.5-ம் தேதி பதிவு செய்தார். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எஸ்ஏசிக்கும் விஜய்க்கும் இடையே மோதலும் வெடித்தது.

கட்சியின் பெயரை பதிவு செய்த எஸ்ஏசி, அதன் பொருளாளர் தனது மனைவி ஷோபா என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையே, ‘அசோசியேஷன் ஆரம்பிக்கப் போவதாகவே எஸ்ஏசி தன்னிடம் கையொப்பம் வாங்கினார். நான் பொருளாளர் பதவியில் இல்லை’ என ஷோபா அதை மறுத்தார். அதேபோல, எஸ்ஏசி, டெல்லியில் கட்சியை பதிவு செய்தபோது அதன் தலைவராக பத்மநாபனை நியமித்திருந்தார். அவரும் சமீபத் தில் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, நடிகர் விஜய், தனது தந்தை எஸ்ஏசி நியமித்த நிர்வாகிகள் அனைவரையும் நீக்கி விட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமித்தார். மேலும், தனது இயக்கத்தின் பெயர், கொடி, புகைப்படம் எதையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கட்சி தொடங்கும் முடிவை எஸ்.ஏ.சந்திரசேகர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். கட்சி, கொடி, புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக் கப்படும் என நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



thanks