விஜய்யின் தொண்டனா, வில்லனா… யார் இந்த 'புஸ்ஸி' ஆனந்த், எஸ்.ஏ.சி பிரச்னை தீருமா?!

440

எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கட்சிப்பதிவு’ விவகாரம், விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு சலசலப்புகளை உண்டாக்கியிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள் வரைப் பலரும் குற்றம்சொல்வது ‘புஸ்ஸி’ ஆனந்த் எனப்படும் என்.ஆனந்த் என்பவரைத்தான். யார் இந்த புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு இவர் எப்படி நெருக்கமானார்?!

56 வயதான ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கும் ஆனந்த், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். 2000-ம்களின் தொடக்கத்தில் ‘புஸ்ஸி’ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பிய இவர் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். புஸ்ஸி தொகுதியில் மீனவக் குடியிருப்புகள் அதிகம். இந்த மீனவ குடியிருப்பு பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் விஜய். ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் இந்தப்பகுதிகளில் இருந்ததால் அரசியலில் பெரிய ஆளாக விரும்பிய ஆனந்த், தேர்தலில் வாக்குகள் கிடைக்க உதவியாக இருக்கும் என்பதால் விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அதிக அளவில் பொருளுதவிகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இவரது தொடர் உதவியால் அப்பகுதி ரசிகர்கள் இவரை கெளரவத் தலைவராக்க, அப்படித்தான் விஜய் ரசிகர் மன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார் ஆனந்த்.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே விஜய் மற்றும் அவரது தந்தையை சந்தித்து விஜய் ரசிகர் மன்றத்துக்கு தான் செய்துவரும் உதவிகளை சொல்லி அறிமுகமாகியிருக்கிறார். 2005-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனியாகத் தொடங்கப்பட்ட புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸில் இணைந்த ஆனந்த், புஸ்ஸி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத்தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்தித்தது புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ். ஆனந்த் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். ஒரு ஒரு எம்.எல்.ஏ நம் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது நல்லது என்பதை உணர்ந்து அவருக்கு எஸ்.ஏ.சி-யும், விஜய்யும் பல்வேறு பொறுப்புகள் கொடுத்து அவரை கெளரவத் தலைவராக்கிப் பின்னர் தலைவராகவும் உயர்த்தினார்கள். ஆனந்துக்கு முன்பாகவே விஜய் நற்பணி மன்றத்தில் இருந்த சிலருக்கும், ஆனந்துக்கும் பிரச்னைகள் வர அவர்கள் எஸ்.ஏ.சி-யை அணுகியிருக்கிறார்கள்.

இந்தச்சூழலில்தான் ஆனந்துக்கும், எஸ்.ஏ.சி-க்கும் கருத்துவேறுபாடுகள் முளைத்திருக்கிறது. ”சீனியர் பொறுப்பாளர்களை மதிப்பதில்லை, தனக்கென தனி வட்டம் உருவாக்கிகொண்டு அவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்கிறார், நிர்வாகிகளின் போன் அழைப்புகளுக்கு பதில் தருவதில்லை, தொடர்ந்து புறக்கணிக்கிறார்” என ஆனந்த் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் விஜய் இயக்கத்தைச் சேர்ந்த சிலர். அதேசமயம் ”ஆனந்த் செய்வதுதான் சரி. விஜய்யின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டு அதன்படி அவர் செயல்படுகிறார். சிலர் தன்னிடம் நெருங்கக்கூடாது என விஜய் நினைக்கிறார். அப்படிப்பட்டவர்கள் விஜய்யை நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார் ஆனந்த். இதற்காக கடுமையாக நடந்துகொள்கிறார். அதனால் அவர் சிலருக்கு வில்லனாகத் தெரிகிறார்” என்கிறது இன்னொரு தரப்பு.

நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்

எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய் என்னப் பிரச்னை?!

” ‘அப்பாவுக்கு வயதாகிவிட்டது, அவர் ஓய்வெடுக்கவேண்டும். நான் நன்றாக சம்பாதிக்கும்போது அவர் ஏன் இன்னும் சினிமா, ஷுட்டிங் என வெளியேபோகவேண்டும்’ என விஜய் நினைப்பதும், ‘நான் இப்படித்தான் இருப்பேன். நீ என் விஷயங்களில் தலையிடக்கூடாது. என்னைக் கட்டுப்படுத்தக்கூடாது’ என எஸ்.ஏ.சி சொல்வதும்தான் பிரச்னைக்கான ஆரம்பப்புள்ளி. ‘இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன். அதை நீங்கள் எந்தத்தயாரிப்பாளருக்கு வேண்டுமானாலும் கொடுத்து படம் எடுத்துக்கொள்ளலாம்’ என்பதும் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தந்தையோடு போட்ட டீல். ‘உடல்நலப் பிரச்னைகளுக்காக ஏகப்பட்ட மாத்திரைகள் எடுக்கும் அப்பா, வீட்டில் ஓய்வில் இருக்கட்டும். சினிமா தொடர்பான பணிகள், மக்கள் இயக்கப் பணிகளுக்கு எல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். வேலைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அப்பா எந்த டென்ஷனும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் என் விருப்பம்’ என நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் வைத்துக்கொண்டே தந்தையோடு பேசியிருக்கிறார் விஜய். ஆனால், எஸ்.ஏ.சி-யோ ‘நான் தொடர்ந்து படங்கள் இயக்குவேன், நான் ஆரம்பித்ததுதான் உன்னுடைய இயக்கம். அதனால் அதிலும் தொடர்ந்து செயல்படுவேன்’ எனச்சொன்னது விஜய்க்கு வருத்தம்தர அதில் இருந்தே இருவரும் சரிவரப்பேசிக்கொள்வதில்லை. ஆனால், மகனாக தாய், தந்தைக்கு செய்யவேண்டிய கடமைகளை விஜய் செய்யத்தவறியதில்லை. வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு முறை தன்னுடைய மனைவி சங்கீதாவை பெற்றோரின் வீட்டுக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் கிடைக்கிறதா, தேவைகள் ஏதும் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கவனித்துக்கொண்டுவருகிறார் விஜய்.

மகனும், தந்தையும் பல ஆண்டுகளாகவே சண்டை போடுவதும், சேர்வதுமாகத்தான் இருப்பார்கள். இப்போது அரசியல் கட்சியாகப் பதிவு செய்த விஷயத்தால் இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் வீட்டையும் தாண்டி வெளியே தெரிந்துவிட்டது. விரைவில் இருவருக்கும் உள்ள கசப்புகள் சரியாகிவிடும். தந்தையும், மகனும் சேர்ந்துவிடுவார்கள்” என்கிறார்கள் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

thanks