மீண்டும் பரவும் ‘மாஸ்டர்’ வதந்தி | master in ott

461

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு தொடர்பாக மீண்டும் வதந்தி பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஏப்ரல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனிடையே, அவ்வப்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது எனத் தகவல் வெளியாவதும் அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 27) மீண்டும் ‘மாஸ்டர்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என வதந்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பாக படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது, “முதலில் ‘மாஸ்டர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். திரையரங்கில் வெளியானவுடன் தான் ஓடிடி தளத்தில் வெளியாகும். முதலில் திரையரங்கில் தான் வெளியாகும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

thanks