`மாஸ்டர்' டீஸர்… இதையெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்தீங்களா? #Master #HiddenDetails

361

எப்படியோ பல நாள் காத்திருப்புக்குப் பிறகு விஜய் ரசிகர்களுக்குத் தீபாவளி பரிசாக வெளிவந்திருக்கிறது ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர். இந்த வருடம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளுக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரோனா சூழலால் டீஸரே இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்ட டீஸரை ‘படம் எப்போது ரிலீஸ் என்ற தெளிவு பிறக்காமல் எதை வெளியிட்டாலும் வீண்’ என ரசிகர்களின் அன்பு மிரட்டல்களுக்குச் செவிசாய்க்காமல் பொறுமை காத்துவந்தது லோகேஷ் அண்ட் டீம். இறுதியாக இப்போது திரையரங்குகளும் திறக்கப்பட்டு விட்டதால் நம்பிக்கையுடன் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள்.

மாஸ்டர் டீஸர்

ஒற்றை வசனம் இல்லாமல் உடல்மொழியிலேயே விளையாடுகிறார் விஜய். விஜய் சேதுபதிக்கும் வெளுத்துவாங்கத் திரையில் போதிய ஸ்பேஸ் கிடைக்கும் எனத் தெரிகிறது. டீஸர் பார்க்கும்போது மாஸ் மீட்டரை சரியாகப் பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்றே சொல்லத் தோன்றுகிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

கோவக்கார காலேஜ் ப்ரொஃபஸர் ‘வாத்தி’ JD என்கிற ஜான் துரைராஜ். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கும் இவர் கல்லூரியில் செய்யும் அலப்பறைகளை விவரிக்கும் வாய்ஸ் ஓவருடன் ஆரம்பிக்கிறது டீஸர். படத்தின் முதல் பாதி பெரும்பாலும் கல்லூரி வளாகத்திலேயே நடக்கும் என நம்பலாம். கல்லூரி மாணவத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை சுற்றித்தான் முதல் பாதி நகர வேண்டும். ஒரு பக்கம் சாந்தனு நிற்கிறார். அவர் பெயர் பார்கவ். சாந்தனுவின் போட்டோவுடன் ‘Vote for Bhargav’ என்ற போஸ்டர்களை இரண்டு கட்களில் பார்க்கமுடியும்.

‘Vote for Bhargav’ போஸ்டர்கள்
‘Vote for Bhargav’ போஸ்டர்கள்

சாந்தனு கேங் ஒருபுறம் போட்டிப் போடுகிறது என்றால் கௌரி கிஷன் டீம் எதிர்த்துப் போட்டியிடுகிறது. இவர்கள் பக்கம் நிற்கிறார் விஜய். இந்த இரண்டு கேங்குகளுக்கும் இடையே நடக்கும் மோதல்களை டீஸரில் பார்க்கமுடியும்.

அதில் கௌரி கிஷனுடன் முன்னணியில் விஜய் வருவதையும் பார்க்கலாம். இந்த போட்டியின் முடிவைக் கேட்க மாணவர்கள் அனைவரும் கூடி நிற்கும் ஒரு ஃப்ரேமும் டீஸரின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கிறது.

கேங் மோதல் | கௌரி கிஷனுடன் முன்னணியில் வரும் விஜய்
கல்லூரி தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

இதிலும் கௌரியை இடது ஓரத்தில் பார்க்கலாம். அவர்தான் சாந்தனுவுக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்பதை இது இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறது.

சரி இப்போது விஜய் சேதுபதி பக்கம் வருவோம். அவர் வரும் முதல் காட்சி இறைச்சிக்கூடம் (மாட்டிறைச்சி போலத் தெரிகிறது) ஒன்றில் நடக்கிறது. முதல் பாதியில் விஜய் சேதுபதிக்கென தனி ட்ராக்கில் ஒரு கதை நகரும் எனத் தெரிகிறது. தனி ஆக்ஷன் சீன் கூட இருக்கிறது.

இறைச்சிக்கூடத்தில் விஜய் சேதுபதி
லாரிகள்
வெட்டப்பட்டிருக்கும் மரங்கள்
விஜய் சேதுபதியின் சோலோ ஆக்ஷன் சீன்

டீஸர் நெடுக லாரிகளை அதிகம் பார்க்கமுடிகிறது. விஜய் சேதுபதியின் சோலோ சண்டைக்காட்சி ஒன்றில் வெட்டி அடுக்கப்பட்டிருக்கும் மரங்களையும் பார்க்க முடிகிறது. அதனால் மரக்கடத்தல் மூலம் பெரிய புள்ளியாக வளர்ந்தவராக விஜய் சேதுபதி காட்டப்பட வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. பெரும்பாலும் இடைவேளைக்கு முன் வரை விஜய்யின் கதையும் விஜய் சேதுபதி கதையும் ஓரிரு இடங்களில் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

சிறார் சீர்திருத்த பள்ளியில் அர்ஜுன் தாஸ்

டீஸரில் சிறார்களை அதிகமாகப் பார்க்கமுடிகிறது. சிறார் சிறை ஒன்றையும் காட்டுகிறார்கள். அங்குதான் தீனா பணியாற்றுகிறார். அர்ஜுன் தாஸ் போன்ற கதாபாத்திரங்களையும் அங்கு பார்க்கமுடிகிறது.

முதல் பாதி லுக் | இரண்டாம் பாதி லுக்

இந்த காட்சிகள் அனைத்திலும் விஜய் ட்ரிம் செய்த ஃபார்மல் லுக்கில் இருக்கிறார். கல்லூரியிலிருந்து எதோ ஒரு காரணத்திற்காக விலகுகிறார் அல்லது விலக்கப்படுகிறார் விஜய். அவரது குடிப்பழக்கம் எதோ ஒரு பெரிய பாதிப்பை அங்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால் குடியைக் கைவிட்டு இந்த கெட்-அப்புக்கு மாறுகிறார் விஜய். இதன் நடுவில்தான் ‘Quit Pannuda’ பாடல் இடம்பெற்றிருக்கும். இதன் பிறகு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குப் பணியாற்ற வருகிறார் விஜய்.

சிறார் சீர்திருத்த பள்ளியில் காலேஜ் வாத்தி

முதல் பாதியிலேயே சிறார் சீர்திருத்த பள்ளிக்கு எதோ ஒரு காரணத்துக்காக விசிட் அடிக்கிறார் காலேஜ் வாத்தி, அதில்தான் விஜய் சேதுபதியின் அடியாள்களில் ஒருவரான அர்ஜுன் தாஸுடன் மோதுகிறார்.

சிறார்களை வைத்து விஜய் சேதுபதி சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவது விஜய்குத் தெரிய வருகிறது. அனேகமாக அது போதைப் பொருள் விநியோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எதோ வகையில் இது முதல் பாதியிலேயே விஜய் பணியாற்றிய கல்லூரியிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனால்தான் அப்போதே விஜய் சேதுபதிக்கும் விஜய்க்கும் உரசல் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்போது சிறார் சீர்திருத்த பள்ளிக்கு வந்த பிறகு மீண்டும் இருவரும் மோதுகின்றனர்.

சிறார்கள் தொடர்பான சண்டைக்காட்சி | பின்னணியில் மாளவிகா

முதல் பாதியில் விஜயின் அடாவடி பிடிக்காமல் இருக்கும் மாளவிகா மோகனன், இரண்டாம் பாதியில் குடியை விட்டபிறகு சாந்தமாகும் விஜய் மீது காதல் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

டீஸரில் விஜய் – விஜய் சேதுபதி சந்தித்துக்கொள்ளும் காட்சிதான் க்ளைமாக்ஸ். இதிலும் பின்னணியில் சிறார்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

விஜய் – விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ்
விஜய் – விஜய் சேதுபதி மோதல்

படத்தில் இரண்டு லுக்கிலும் எக்கச்சக்க சண்டைக் காட்சிகள் இருக்கின்றன விஜய்க்கு. அனைத்திலும் எப்போதும் போல வெளுத்துவாங்குகிறார். இதனால் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி எப்படி இருக்கப்போகிறது என இப்போதே ரசிகர்களின் பல்ஸ் எகிறுகிறது.

Also Read: கமலின் `விக்ரம்’ டீஸர் ஷூட் எங்கே நடந்தது, அங்கே என்ன நடந்தது?! #Vikram #KamalHaasan232

படத்தில் இதையும் தாண்டி நிச்சயம் பல சர்ப்ரைஸ் விஷயங்களை வைத்திருப்பார் லோகேஷ். டீஸரில் ஆண்ட்ரியா, மாஸ்டர் மஹேந்திரன் போன்ற கதாபாத்திரங்களைக் கண்ணில் காட்டவில்லை லோகேஷ். மொத்தமாக வாத்தி ‘ரெய்டு’ வந்தால்தான் முழு கதை நமக்கு தெரியும். சீக்கிரமா வாங்க மாஸ்டர்!

இது இல்லாமல் டீஸரில் நீங்க எதாவது நோட் பண்ணீங்களா… கமென்ட்களில் பதிவிடுங்கள்!

thanks