தற்கால அரசியலை பேசும் தமிழ் ஹிப்ஹாப் இசைத்தொகுப்பு “தெருக்குரல் “

440

தமிழ் ஹிப்ஹாப் என்றவுடனே “மடை திறந்து னா னா னான” என்ற யோகி B யும், “கிளப்புள மப்புல திரியுர பொம்பள” என்று பாடிய ஹிப்ஹாப் தமிழாவும் தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால்..அதையெல்லாம் கடந்து இப்போது உலகத்தரத்தில் ஒரு ஹிப்ஹாப் ஆல்பம் தமிழில் வெளியாகி இருக்குன்னா நம்ப முடியகிறதா? ஆம்.. #தெருக்குரல் என்ற பெயரில், தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ் அறிவு மற்றும் ஆஃப்ரோ இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆல்பம் இசைப் பிரியர்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

“என்னா நான் உனக்கு Anti Indian Ah??
Bore அடிக்குது போராடலாம் வாங்க தோழர்..
” நீ என்பது ஓட்டு மட்டுமே, நாடு என்பதே ரேட்டு மட்டுமே. “
…என் திமிரான தமிழச்சியே.
..தூத்துக்குடி ஸ்னோலின் குறித்த பாடல், என
சமீபத்திய நிகழ்வுகள் அத்தனையும் பாடி வியக்க வைக்கும் இந்த ராப் ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள்.

கள்ளமௌனி- என்ற நாம் கேட்டிராத புதிய வார்த்தையோடு தொடங்குகிறது ஆல்பம். முதல் பாடலிலேயே, ப்பா..என்னடா பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்ட என்ற அளவு கலாய் வரிகளால் தற்கால அரசியலை வச்சு செஞ்சிருக்காங்க. அதனைத் தொடர்ந்து அடுத்த அதிரடியாக ஏற்கனவே இணையத்தளத்தில் வைரலாகப் பரவிய #anti indian பாடல். இருக்கின்ற சமூகப் பிரச்சினைகள் அத்தனையையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கு அந்த ராப் இன் கோபமும் வேகமும் கேட்கிற ஒவ்வொருவரையும் எவ்வளவு மோசமான சமூக சூழலில் நாம வாழறோமேன்னு சிந்திக்க வைக்கிறது.
இந்தியாவின் வட எல்லை ஜம்முவில் காமவெறியர்களால் கொல்லப்பட சிறுமி ஆசிஃபாவும், கடைக்கோடித் தெற்கில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலினும் ஒரு கடிதம் எழுதுகிறார்கள், நம் எல்லாருக்கும்.

“நான் ஸ்னோலின் பேசுறேன்
உன் காதில் விழுதா..
என் தங்கை ஆசிஃபா..
என்கூடதான் இருக்கா.. “.

இந்தப் பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
” இருண்ட கருவரைக்குள் கடவுள் முன்பு நடந்ததென்ன, ஒருவேளை நா பொண்ணா பிறக்காம..மாடா பிறந்திருந்தா? ” போன்ற வரிகள் தமிழ் இசையுலகிற்கு முற்றிலும் புதிது.

வழக்கமான பெண்களை அழகு என வர்ணித்தல், இல்ல விட்டுட்டு போய்ட்டாளே என வசைமொழி பாடுதல், காதலை மிகைப்படுத்தி உணர்ச்சிப் பூர்வமான கவிதை வரிகள் , இவை எதுவும் இல்லாத ஒரு பெண்ணின் திமிரை, சுதந்திரத்தை, விருப்பங்களை ஆண் கொண்டாடும், வித்தியாசமான ரொமான்டிக் தமிழ் பாடல் திமிரான தமிழச்சி..

வரிகள் ஒவ்வொன்றிலும் மனித உரிமைகளையும், வாழ்வியலையும், மக்கள் பிரச்சனைகளயும் வெளிப்படையாகப் பேசும், அரசியல் ஹிப்ஹாப் #தெருக்குரல், ஆல்பத்தை இயக்குநர் பா.இரஞ்சித் வழங்கும் தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடலாசிரியர், பாடகர் அறிவு, தனியிசைக் கலைஞர், இசையமைப்பாளர் ஆஃப்ரோ இருவரும் OfRo Arivu x ofRO என்ற மேடைப் பெயரில் உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆல்பம்தான் தமிழ் ஹிப்ஹாப் வரலாற்றிலேயே பெஸ்ட் என பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் வெளிவரும் ஒரே தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் #தெருக்குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இசையமைப்பாளர் டென்மா Tenma Tenma – டென்மா மற்றும் மலேசிய ராப் கலைஞர் ரோஷன் ஜாம்ராக் ஆகியோரும் பாடியுள்ளனர்.
பாடலாசிரியர் அறிவு Arivu “காலா” படத்தில் வரும் “உரிமையை மீட்போம்” பாடல் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர். அதனைத் தொடர்ந்து, வடசென்னை, ஜிப்ஸி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதி பாடி வருகிறார். ஆஃப்ரோ, கோலிவுட்டின் ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்தவர். அனேகன், என்னை அறிந்தால், வனமகன், உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் பிண்ணனி இசைத் தொழில்நுட்பக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.
தனியிசை மற்றும் ஹிப்ஹாப் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இருவரும் கடந்த ஒரு ஆண்டு உழைப்பில் மிக நேர்த்தியாக உருவாக்கிய #தெருக்குரல் இப்போது தமிழ் ஹிப்ஹாப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுள்ளது எனலாம்.

மக்களுக்கிடையே பிரிவினைகளை ஊன்ற பள்ளிப் பாடப்புத்தகத்தில் கூட விஷமமான் மாற்றங்கள் கொண்டு வரும் சூழலில். இருக்கிற சமூக அவலங்களை, சமத்துவத்தின் தேவையை, மனித மாண்பை துணிச்சலாகவும் தெளிவாகவும் உரத்துப் பேசியிருக்கும் #தெருக்குரல் தமிழ் ஹிப்ஹாப் அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய ஒன்றுதான்.
பாடல்களைக் கேட்க இந்த லிங்க்கைத் தொடரவும்.
கள்ளமௌனி பாடலின் மியூசிக் வீடியோ, வரும் ஞாயிறு காலை 9 மணிக்கு, தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ் யூடியூபில் வெளியிடப்பட உள்ளது.

Listen to The most expected #Therukural தெருக்குரல் https://songwhip.com/album/arivu/therukural