சூர்யா, சுதா, அமேஸான் ப்ரைம்… ஜெயிச்சாங்களா இல்லையா?! `சூரரைப் போற்று' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

362

மரணப்படுக்கையில் மகனின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் தந்தைக்கு, இறுதி மரியாதைக்கூட செலுத்தமுடியாமல், பணம் இருந்தும் விமானம் ஏற முடியாமல், பிச்சை எடுக்கும் நிலைக்குத்தள்ளப்படும் இளைஞனின் ”வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” என்கிற கேள்வியும், கோபமும், லட்சியத்தை நோக்கிய வெறிபிடித்த பயணமுமே ‘சூரரைப் போற்று’.

‘Low Cost Airline’ என்கிற குறைந்தவிலை விமானசேவையை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கைப்பயணத்தில் கொஞ்சம் உப்பு, காரம் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து, விறுவிறுப்பான, நம்பிக்கையான, இளைஞர்களுக்கு சாதிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டக்கூடிய படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

சூரரைப் போற்று

* பயோபிக் படங்களை சுவாரஸ்யமாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம். சுதாவின் குருநாதர் மணிரத்னத்தின் ‘குரு’வே இந்த ஏரியாவில் கொஞ்சம் பிசிறடிக்கும். ஆனால், சுதா கொங்கரா இந்தப் புனைவு கலந்த பயோபிக் கதைசொல்லலில் குருவுக்கு டஃப் ஃபைட் கொடுத்துள்ளார். வாழ்த்துகள் சுதா…. உங்ககிட்ட இந்த சமூகம் இன்னும் நிறைய எதிர்பார்க்குது!

* ‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவை மீண்டும் பார்த்ததுபோல் இருக்கிறது. நெடுமாறன் ராஜாங்கமாக நடிப்பில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். ”யானையை வெச்சிக்கிட்டு ரோட்ல என்னப் பண்ணிட்டிருக்கான் பாரு” என்பார்கள். அதுபோல ஒரு மிகச்சிறந்த நடிகனை வைத்துக்கொண்டுதான் இந்த இடைப்பட்ட 12 ஆண்டுகளில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்களா? சில ஆண்டுகளாக சூர்யாவின் உழைப்பு படத்தில் தெரியாது, பலரின் பேட்டிகளில்தான் தெரியும். ஆனால், சூர்யாவின் உழைப்பும், அவரது அர்ப்பணிப்பும் இந்தமுறை படத்தில் தெரிகிறது. நீங்க ஜெயிச்சிட்டீங்க சூர்யா… அடித்து ஆட, இன்னும் பல சதங்கள் – சாதனைகள் படைக்க, சிக்ஸர்கள் பறக்கவிட செகண்ட் இன்னிங்ஸுக்கான களம் தயாராக இருக்கிறது!

சூரரைப் போற்று

* ”நீங்க தோத்துட்டீங்கப்பா…” என முகத்துக்கு நேராக விமர்சிக்கும் மகனிடம் கோபப்பட்டு கைநீட்டும் காட்சியில் ‘பூ’ ராமுவும், அம்மா ஊர்வசியும் தாங்கள் எப்பேர்பட்ட தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். அந்த மூன்று நிமிட காட்சி கண்களை கலங்கடிக்கிறது!

* ஹீரோயின் பொம்மியாக அபர்ணா. சூர்யா எப்போதும் கடித்து தின்ன ஆசைப்படும் ‘பன்’போலவே இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பெண் கதாபாத்திரம் இல்லை அபர்ணாவுக்கு. நடிப்பையும், நம்பிக்கையையும் கண்களில் கடத்தியிருக்கிறார் அபர்ணா… கலக்கு கண்ணே!

* ராணுவ உயரதிகாரியாக நடித்திருக்கும் மோகன்பாபு சில நிமிடங்களே படத்தில் வந்தாலும் இறுதியில் ராயல் சல்யூட் அடிக்கவைக்கிறார். பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சோம் கூட ஒரு காட்சியில் வந்துவிட்டுப்போகும் அளவுக்குப் படத்தின் ஸ்டார்காஸ்ட் அவ்வளவு ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

* பாடல்கள் எந்த இடத்திலும் படத்தின் வேகத்துக்குத் தடையாக இல்லை என்பதோடு, பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

சூரரைப் போற்று

* பவர்ஃபுல் வசனங்களுக்கு அவ்வளவு பெரிய ஸ்பேஸ் இருந்தும், சில இடங்களில் வசனங்கள் மிகவும் சாதாரணமாக எழுதப்பட்டிருக்கிறது. கதை எங்கே நடக்கிறது, சோழவந்தானில் இருக்கிறார்களா, சென்னையில் இருக்கிறார்களா, பாலையாவை எங்கே சந்திக்கிறார்கள், ஜாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனரை சூர்யா எங்கே சந்தித்து சவால் விடுகிறார் என லொக்கேஷன் குழப்பம் படத்தில் எக்கச்சக்கம்.

* விமான நிறுவனம் ஆரம்பிக்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுபவர் மனைவியிடம் 15,000 ரூபாய் கேட்டு, அதை சரியாகத் திருப்பிக்கொடுத்துவிடுவேன் என சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்கும்போது… ஸாரி ப்ரோ, கொஞ்சம் சிரிப்பு வருது.

சூரரைப் போற்று

* படத்தில் எமோஷனல் கோஷன்ட்டை கூட்டவேண்டும் என்பதற்காக ஊர்க்காரர்கள் பணம் அனுப்பிவிட்டு போனில் பேசும் காட்சிகள், அப்பாவின் கடிதங்களை மகன் படிக்கும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் ஓவர் அழுகாச்சிக்கு ஆசைப்பட்டதை அப்பட்டமாகக் காட்டிவிடுகிறது.

ஆனால், மொத்தத்தில் சூர்யா, சுதாவின் ‘சூரரைப் போற்று’ 2020-யில் தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கைத்தந்திருக்கும் தரமான படைப்பு.

ஆமா, ஹீரோவுக்கு ஏன் மாறன் எனப் பெயர்வைத்தார்கள்?!

thanks