’சண்டைக்காட்சி எடுக்க பயமா இருக்கும்; கண்ணை மூடிக்குவேன், பயந்தாங்கொள்ளி நான்!’ – இயக்குநர் பாரதிராஜாவின் ‘டிக்… டிக்… டிக்…’ அனுபவங்கள் | bharathirajaa – tik tik tik

515

’சண்டைக்காட்சிகள் எடுக்க எனக்கு பயம். இதையெல்லாம் எடுக்க சின்ன ஞானம் வேண்டும். படம் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆனால் சண்டைக்காட்சி எடுக்கும் போது நான் கண்களை மூடிக்கொண்டேன்’ என்றார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில், தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர் கூறியதாவது:

’டிக் டிக் டிக்’ படத்தை இப்போது நினைத்துப் பார்த்தால் ஒரு விஷயம் காமெடிதான். இங்கிருந்து அழகிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி, அங்கே அவர்களின் உடலுக்குள் ஆபரேஷன் செய்து வைரம் வைத்து, அந்த இடத்தை மார்க் செய்து, மீண்டும் இந்தியா வந்ததும் அந்த இடத்தை ஆபரேஷன் செய்து எடுப்பதாக கதை.

சென்னை ராஜாஜி ஹாலில்தான் படத்தின் ஆரம்பக் காட்சியை வைத்திருந்தேன். அந்த ஆரம்பக் காட்சிக்கு இளையராஜா தன் இசையால் மிரட்டியெடுத்திருந்தான். தயாரிப்பாளர் ஆர்.சி.பிரகாஷ்க்கு படத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. படத்தை பிரமாண்டமாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் விருப்பம். நான் அதிகமாக செலவழித்து எடுத்த படம் ‘டிக் டிக் டிக்’ படமாகத்தான் இருக்கும்.

விபத்துக் காட்சி, கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுவது, சண்டைக்காட்சி இவையெல்லாம் நமக்கு பயம். நீங்கள் நம்பமாட்டீர்கள். கமல் கீழே விழவேண்டும். அப்போதெல்லாம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுவதற்கென்றே தனியே ஆட்கள் இருப்பார்கள். கமல் எடுத்துத்தான் ஆகவேண்டும் என்கிறார். எனக்கோ உடன்பாடில்லை. ’நானே பண்றேன்’ என்கிறார் கமல். எல்லா வேலையும் பண்ணுவார் கமல்.

காஸ்ட்யூம் ரெடி செய்து, கமல் தயாராக இருக்கும் வரைதான் பார்ப்பேன். ஆக்‌ஷன் சொல்லிவிட்டு விழுவதைப் பார்க்கமாட்டேன். முகத்தைத் திருப்பிக் கொள்வேன். கண்ணை மூடிக்கொள்வேன். அப்படியொரு பயந்தாங்கொள்ளி டைரக்டர் நான். ஆனால் படம் பார்த்தால் க்ரைம் மிரட்டலாக இருக்கும்.

இதேபோல, படத்தில் எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். ஆயிரம் விளக்கு பகுதியில் அதிகாலை மூன்று மணிக்கு படப்பிடிப்பு. கமல் ஓடிவரவேண்டும். காரில் துரத்துவார்கள். ஒரு பெட்டிக்கடை இருக்கும். அந்தப் பெட்டிக்கடைக்குள் வண்டி மோதும். பெட்டிக்கடை செட் போட்டிருந்தோம். படப்பிடிப்புக்கு பர்மிஷனெல்லாம் கேட்கவில்லை அப்போது.

கமல் ஓடி வந்து கடைக்கு வருவார். அத்துடன் ஒரு ஷாட். பிறகு கமலை வெளியே வரவைத்து, வண்டி கடையை மோதுவது போல் ஷாட். அந்த ஷாட் எடுத்து முடித்தால், ரோடு முழுக்க பீங்கான் உடைத்து தூள்தூளாகக் கிடக்கிறது. டிரைவருக்கு நெற்றியில் காயம். அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்.

‘இதுக்குதான்யா நான் இந்த மாதிரி சண்டைக்காட்சியெல்லாம் எடுக்கமாட்டேன்னு சொல்றேன்’ என்றேன். எனக்கு வயலன்ஸ் பிடிக்காது. அதனாலதான் பெண்கள், பூக்கள், நதி, மரங்கள், மேகம், நதி, மலைகள்… இப்படி எடுத்துவிடுகிறேன். கதை இருக்கவேண்டும். ஒரு அழகு இருக்கவேண்டும்.

இன்னொரு சம்பவம்…

ராஜாஜி ஹாலில் படப்பிடிப்பு. எனக்கு நான்கு அஸிஸ்டெண்ட். மணிவண்ணன், சித்ரா லட்சுமணன், மனோஜ்குமாரெல்லாம் இருந்தார்கள். இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்தால், படப்பிடிப்பு நடந்துகொண்டே இருக்கும். அடுத்த காட்சி, அடுத்த காட்சி என்று போய்க்கொண்டே இருப்பேன். விடிந்து ஏழு மணியாகிவிட்டது. டெலிபோன் பூத் காட்சி.

வெளிச்சம் நன்றாகவே வந்துவிட்டது. உதவி டைரக்டரை அழைத்தால் ஒருத்தர்தான் நிற்கிறார். மொத்தம் 75 பேர் வரைக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் ஆறேழு பேர்தான் இருக்கிறார்கள்.

கமல் என்னைப் பார்த்து சிரித்தார். மனோஜ்குமார் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிவிட்டார். மணிவண்ணன் ஒருமணிக்கெல்லாம் தூங்கிவிட்டார். இன்னொருத்தர் மூன்று மணிக்கெல்லாம் தூங்கிவிட்டார்.

அப்படித்தான், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுத்தேன். கமல்,வி.கே.ராமசாமி,மாதவி மூவரும் வண்டியில் வர,லாரி துரத்தும். செங்கல்பட்டு பாலாற்றுப் பாலத்தில் எடுத்தேன். மிகப்பெரிய அந்த சேஸிங் காட்சியை பதினைந்தே நிமிடத்தில் எடுத்து முடித்தேன்.

இந்த மாதிரி சண்டைக்காட்சிகள் எடுக்க எனக்கு பயம். இதையெல்லாம் எடுக்க சின்ன ஞானம் வேண்டும். படம் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. 38 லட்ச ரூபாயில் படத்தை எடுத்தேன். இந்தப் படம் டெக்னிக்கலாகவும் மாடர்னாகவும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இயக்குநர் ஐ.வி.சசி எனக்கு நல்ல நண்பர்தான். இந்தப் படத்தை அவர்தான் இந்தியில் எடுத்தார்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.



thanks