ஆர்ஜே பாலாஜி தனது பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும்: நடிகை ஊர்வசி | oorvasi about rj balaji style

349

இயக்குநர், நடிகர் ஆர்ஜே பாலாஜியின் வேலை செய்யும் பாணி வித்தியாசமானது என்றும், ஆனால் எல்லா நடிகர்களும் அந்தப் பாணிக்கு ஏற்றவாறு நடிக்க முடியாது என்றும் நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகிய இருவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம், தீபாவளி அன்று நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, பாலாஜியின் வேலை செய்யும் பாணி குறித்து ‘தி இந்து’ ஆங்கிலத்துக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

“ஆர்ஜே பாலாஜியிடன் வசனங்கள், காட்சிகள் எழுதப்பட்ட காகிதம் எதுவும் இருக்காது. அந்தக் காட்சியைப் பற்றிய சுருக்கத்தை எங்களிடம் கொடுத்து எங்கள் விருப்பப்படி பேசச் சொல்லுவார். அவரது இந்தப் பாணி வினோதமாக இருந்தாலும் நடிகர்களின் திறனில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும், நடிகர்களுக்கு அவர் தந்த சுதந்திரமும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஆனால், எல்லா நடிகர்களும் இந்தப் பாணிக்குப் பழக்கப்படவில்லை.

சிலர் கண்டிப்பாக வசனங்கள், காட்சிகள் சரியாக எழுதிக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், நடித்து முடித்ததும் இயக்குநரின் கருத்து என்ன என்றும் கேட்க விரும்புவார்கள். அவர்களுக்காக பாலாஜி தன் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பாலாஜி மிகவும் விளையாட்டுத்தனமானவர். ஒரு தீவிரமான காட்சியில் நடிக்க என்னைத் தயார் செய்துகொண்டு செல்வேன். அங்கு உடனே கிரிக்கெட் வர்ணனை போல பேச ஆரம்பிப்பார். என்ன மாதிரியான இயக்குநர் இவர் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்” என்று ஊர்வசி கூறியுள்ளார்.thanks