அதிவேக படப்பிடிப்பில் ஆதியின் ‘கிளாப்’

380

அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில் நனைவது, தசைகளை நெகிழச் செய்வது, மூட்டுகளை நீட்டுவதை நீங்கள் காண முடியும். ஆம், ஒரு கடுமையான தடகள வீரரான அவர், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் “கிளாப்” படத்தில், தன் கதாபாத்திரத்திற்கு தன் உயிரையும், ஆன்மாவையும் தந்து உழைக்கிறார். ‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் படம் வெளியாகிறது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12ஆம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 20) முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிரபலமடைந்தவர் என்றாலும், முன்னணி நடிகைகளாக நடிக்கும் அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் உடற்பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, “நாங்கள் இப்போது எங்கள் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து முழு வீச்சில் செல்லத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து கலைஞர்களும் தங்களது கதாபாத்திரங்களிளுக்கு தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வதால், என் வேலை எளிதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆதி சார் அனைவரும் வியக்கும் வகையில் தன் உடலமைப்பை பராமரிப்பதில் நன்கு அறியப்பட்டவர். இயற்கையாகவே அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். அகான்ஷா சிங் ஒரு சிறந்த கலைஞர், இந்த கதாபாத்திரத்தில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். கிரிஷா குரூப் கடந்த சில மாதங்களாக தன்னுடைய தடகள் விளையாட்டு வீராங்கணை பாத்திரத்திற்காக மிக கடினமான உழைத்து வருகிறார். ஒரு வேளை அவர் மேலும் பயிற்சி எடுக்க முடிவு செய்திருந்தால், இந்த படத்தை தவிர்த்து விட்டு, நேரடியாக ஒரு தடகள வீராங்கணையாக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம்” என்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பு நடக்கும் தற்போதைய சூழ்நிலையை பற்றி கூறிய இயக்குனர், மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையை நினைத்து மேலும் உற்சாகமடைகிறார். “ஒரு படத்தின் உணர்வுகள் எப்போதும் அவரின் இசை மூலம் சிறந்த முறையில் மேம்படும். எங்கள் திரைப்படமான “கிளாப்” படத்தில் உணர்வுகள் மையமாக இருப்பதால், இசைஞானி இளையராஜா ஐயாவின் ஆத்மார்த்தமான இசையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த படத்தில் 5 பாடல்கள் உண்டு” என்றார்.

நாசர் போன்ற மிகச்சிறந்த நட்சத்திர நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அவர் இந்த படத்தின் வில்லனாக தோன்றுகிறார். முனீஷ்காந்த் கிட்டத்தட்ட மொத்த படத்திலும் தோன்றும் அளவுக்கு மிகவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் சாருடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் கதை நிகழும். மைம் கோபி மற்றும் இன்னும் சில பிரபல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜீவி’ திரைப்படம் மற்றும் ‘மண்ணின் மைந்தர்கள்’ (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ) ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்குநராக பணிபுரிகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை பி.பிரபா பிரேம், ஜி.மனோஜ் & ஜி. ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்