ரஜினி பிறந்த நாளில் புது கட்சி தொடக்கம்? – பெயர், கொடியை அறிவிக்க முடிவு

6

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், ‘‘தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை, போருக்கு தயாராகுங்கள், சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தார். தனது கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விதமாக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார். அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அரசியல் கட்சி எப்போது செயல்படும், கட்சி பெயர், கொடி, கொள்கைகள் போன்றவற்றை வெளியிடாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி காந்த் சங்கர் டைரக்‌ஷனில் 2.0 படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்திலும் நடித்து வந்தார். இதனால் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தாமல் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதில் 2.0 படவேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்து பேட்ட படத்தின் படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, மணலி ஆகிய இடங்களிலும் சென்னையிலும் நடந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் நடந்து வருகிறது.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும். அடுத்து டப்பிங் பணிகள் தொடங்கி ஒரு மாதத்தில் முடிவடைந்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அரசியல் படம் ஒன்றிலும் ரஜினி காந்த் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகும் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதுபற்றி மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் மறுத்தனர். அவர்கள் கூறும்போது ரஜினியின் 2.0 நவம்பரில் வெளியாகிறது. பேட்ட படம் பொங்கலுக்கு வரும். அதன் இறுதிக் கட்டபடிப்பு முடிந்ததும் ரஜினி தனது கட்சி பெயர், கொடி, கொள்கைகளை வெளியிடுவார் என்று தெரிவித்தனர்.

அனேகமாக வருகிற டிசம்பர் 12-ந்தேதி தனது பிறந்த நாளில் புது கட்சி தொடங்குவார். அன்றைய தினம் புதிய கட்சியின் பெயர் கொடி, கொள்கை விவரங்களை ரஜினி அறிவிப்பார். அதற்கு முன் மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் நடத்துவார் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பு தமிழக அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று ரஜினி எதிர் பார்க்கிறார். அதன்பிறகு தனது அரசியல் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் அறிவிப்புக்கு பிறகே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். #Rajinikanth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here