திரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திருப்பியவர் – மு. கருணாநிதி

0
7

திரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திருப்பியவர் – மு. கருணாநிதி

– கவிஞர் மகுடேசுவரன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் தமிழ்ப்பணிகள், திரைப்படப் பங்களிப்புகள் குறித்து மதிப்பிட்டுப் பேசுமாறு தொலைக்காட்சி ஒன்றினால் அழைக்கப்பட்டேன். அந்நிகழ்ச்சியில் பங்கேற்று நானுணர்ந்த சிலவற்றை எடுத்தியம்பவும் வாய்த்தது. முன்னமேயே அவரெழுதிய படங்கள் பலவற்றைப் பார்த்திருப்பினும் அவ்வேளையில் மதிப்பீட்டு நோக்குடன் சில படங்களைப் பார்த்தேன். பாடல்களின் உலகிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை உரையாடல்களின் களத்திற்கு நகர்த்தியதில் அன்னார்க்குப் பெரும்பங்குண்டு என்பது விளங்கிற்று. கருணாநிதிக்கு முன்பாக இளங்கோவன் என்பவர் பெயர்பெற்ற எழுத்தாளராக வலம்வந்திருக்கிறார். உரையாடல் எழுதுவதில் இளங்கோவன் அடைந்த உயரங்கள்தாம் திரைப்படத்திற்கு நன்கு எழுதக் கூடியவர்களைப் பணிக்கமர்த்துவது என்ற தேடலுக்கு வித்திட்டது எனலாம். இல்லையென்றால் முன்னிருந்ததைப் போலவே இருபது பாடல்களுக்கிடையில் “ஸ்வாமி, தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்பதைப்போன்ற வழக்கமான வடமொழித்தொடர்களே உரையாடல்களாக இருந்திருக்கும்.

தமிழ்த் திரையுலகம் ஒரு நிறுவனத்திற்குக் கடன்பட்டிருக்கிறது என்றால் அது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்குத்தான். அந்நிறுவனத்தின் வேர்ச்சுவடுகள்தாம் எங்கெங்கும் பரவின. அங்கிருந்து வெளிப்பட்டவர்கள்தாம் அடுத்து வந்த ஐம்பதாண்டுகளுக்கு அத்துறையை வளர்த்தெடுத்தவர்கள். திரையுலகின் வளர்சிதைமாற்றக் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தலையெடுத்தது. புதிய போக்குகளை உள்வாங்கிக்கொண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து எடுத்தது. புகழ்பெற்ற கலைஞர்கள் அங்கிருந்தே புறப்பட்டார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தேடலும் புதிய புதிய இளைஞர்களை நோக்கியே அமைந்தது. இளமையில் பற்பல நாடகக் குழுக்களில் பணியாற்றிய இளைஞர்கள் சேலத்தை நோக்கிப் படையெடுத்தனர். அப்படி வந்த அனைவர்க்கும் அடைக்கலம் கொடுத்து சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாய்ப்பினையும் வழங்கி வளர்த்தெடுத்தது அந்நிறுவனம். கண்ணதாசனும் எம்ஜிஆரும் கருணாநிதியும் அங்கேதான் உரிய வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

தம் இளமையிலேயே கலையும் அரசியலும் இரண்டு கண்கள் என்று முடிவெடுத்தார் கருணாநிதி. அவருடைய முதற்போராட்டமே அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்ப்பதும் இந்திப் போராட்டத்தில் கலந்துகொள்வதுமாய் அமைந்தது. பள்ளியிலேயே செய்ம்முறை வகுப்பு என்றிருந்தால்கூட அம்முறையின் வாய்ப்புகளை நம்மவர்கள் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். ஆனால், அவருடைய திட்டம் “தந்தை பார்க்கும் வேலையை உடனிருந்து கற்றல்” என்பதாக இருந்ததாம். அவ்வொன்றே வலுவான எதிர்ப்புகளைப் பெருக்கியதாம். கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடுவதில் தொடங்கிய கருணாநிதியின் பயணம் பொதுக்கூட்டம், நாடகம், இதழ் என்று நிலைத்தது. குண்டலகேசியைத் தழுவி கருணாநிதி எழுதிய நாடகம் மந்திரிகுமாரி. அக்காலத்தில் பெண்ணை முதன்மைப்படுத்தித்தான் நாடகமோ திரைப்படமோ எழுதப்பட வேண்டும். அப்படி எழுதினால்தான் எல்லாரும் விரும்பிப் பார்ப்பார்கள். தலைப்புகளும் பெண்பாற் பெயர்களில்தாம் இருக்கும். இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அரசிளங்குமரி, பவளக்கொடி, சிந்தாமணி, பராசக்தி, மருதநாட்டு இளவரசி, இன்பவல்லி, மாயாவதி, மங்கையர்க்கரசி, மங்கம்மா சபதம் என்று பெண்பால் பெயர்களிலமைந்த தலைப்புகள் பெருவாரியாகக் காணப்படுகின்றன. கருணாநிதியும் தம் தொடக்கக் காலப் படங்களில் அவ்வாறு பெயரிடத் தவறவில்லை. மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம் அதனைத் திரைப்படமாக்க விரும்பினார். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிக்கொண்டிருந்த கவிஞர் கா. மு. செரீப் வழியாக சுந்தரத்தின் அழைப்பு கருணாநிதியை வந்தடைந்தது. அப்போது அரசியலில் முழு மூச்சாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த கருணாநிதிக்கு இது பெரிய வாய்ப்பு. இன்றுள்ள ஒருவர்க்கு மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் விடுக்கும் அழைப்பைப் போன்றது அது. தம் பணிச்சூழல் அரசியல் ஈடுபாடுகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற கோரிக்கையோடு திங்களூதியம் ஐந்நூற்றுக்கு அப்பணியில் சேர்கிறார் கருணாநிதி. அன்றைய ஐந்நூற்றைத் தங்கத்தின் மதிப்போடு ஒப்பிட்டால் ஆறு பவுன் வாங்கலாம். மந்திரி குமாரி படத்தில் நாட்டு நலம் நாடும் தளபதி வீரமோகனாக நடித்தவர் பெயர் எம்.ஜி. ராம்சந்தர் என்று தலைப்பில் வருகிறது. எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கியிருக்கிறார். படம் முடியும் வேளையில் அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் மீதப்பணிகளை முதலாளி சுந்தரமே முடித்துவைக்கிறார். ஜி. இராமநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்ற பலரும் பிற்காலத்தில் உடுமதிப்பினைப் பெற்றார்கள். படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய அப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கின்றன. ‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்னும் பாடலும் ‘வாராய் நீ வாராய்’ என்னும் பாடலும் இன்றும் ஒலிக்கின்றன. படத்தின் நாயகன் வீரமோகன். அவர்க்குக் குறைந்த காட்சிகள்தாம். மேற்சொன்ன இரண்டு பாடல்களும் அவர்க்கு வாய்த்தவை அல்ல. எஸ். ஏ. நடராஜன் என்பவர்க்கு வாய்த்தவை. நடராஜனின் குரலில் தமிழ்த்திறம் தென்படவில்லை. நாட்டுப்புறத்தார் எழுத்துத் தமிழில் பேசுவதைப் போன்று அமைந்துவிட்டது. கருணாநிதியின் தமிழை அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரெழுதும் தமிழை எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு விடை பராசக்தியில் சிவாஜி கணேசனின் வடிவில் வந்தது. படத்தினை ஒரேயொருவர் கட்டி நிறுத்துகிறார். அவர்தான் கருணாநிதி. அவர் உரையாடல் இயற்றுநர் மட்டுமில்லை. படத்தின் கதையாக்கத்திற்கும் திரைக்கதை வடிவத்திற்கும் பொறுப்பாளர். அப்பணியைச் செவ்வனே செய்தார். அதுவரை ஒரு படத்தின் எழுத்துப் படிக்குக் கிடைத்து வந்த தகைமையை மந்திரி குமாரியில் பன்மடங்கு உயர்த்திவிட்டார் என்றே தோன்றுகிறது. ஐம்பது மற்றும் அறுபதுகளில் திரைப்படங்களுக்கு எழுதக்கூடியவர்களைத் தேடி அலைந்தார்கள். கண்ணதாசனிலிருந்து ஆரூர்தாஸ் வரைக்கும் பலர் காட்டில் மழை. கே.எஸ். கோபாலகிருஷ்ணனைப் போன்று எழுதக்கூடியவர்களே இயக்குநர்களாக மாறிய பிறகுதான் அப்போக்கு மட்டுப்பட்டது. தாம் எழுதியவற்றால் திரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருணாநிதி. திரையிலேறும் எழுத்துகளால் ஆள்வோர்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றினார். பார்வையாளர்களின் சமூகப் பார்வைக்கு வெளிச்சம் காட்டினார். பராசக்தியின் வெற்றிக்குப் பிறகுதான் அரச கதைகளை விடுத்து சமூகக்கதைகளை ஆக்கும் போக்கு தொடங்கியது. அன்றையை மேடையும் திரைப்படமும் மக்களை ஆட்டுவித்தன. அவற்றின் தலைமகனாக விளங்கியவர் கருணாநிதி என்றால் மிகையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here